

வயது வந்த மகன், மகளின் நண்பர்கள் குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
பணிபுரியும் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று முன்தினம் அரண்வாயல்குப்பத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், ஏடிஎஸ்பிக்கள் மீனாட்சி, முத்துக்குமார், திருவள்ளூர் டிஎஸ்பி துரை பாண்டியன், பெண் இன்ஸ்பெக்டர்கள் பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில், பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
கருத்தரங்கில் டிஐஜி சாமுண்டீஸ்வரி தெரிவித்ததாவது:
பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க பெற்றோர்கள் அவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உணர்வுடன் இருப்பது குறித்து பெற்றோர்கள் விளக்கமாக எடுத்துரைப்பதன் மூலம் பாலியல் தொல்லை தரும் குற்றவாளிகளிடம் இருந்து குழந்தைகளை காத்துக்கொள்ள முடியும்.குறிப்பாக, பாதுகாப்பற்ற தேவையில்லாத தொடுதல் முறை குறித்துபெண் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும்.
10 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் செல்போன்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். பெற்றோர்கள் வயது வந்த மகன், மகளின்நண்பர்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.