

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதியை தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசுவழங்கியது. இதற்கான கட்டணமாக ஒரு நாளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (ஐசியூ) வரை வசூலிக்க அனுமதித்தது. அதிகம் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
ஆனாலும், அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து செய்திகள் வெளியாகும் மருத்துவமனைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
கரோனா அல்லாத பிறநோய்கள், விபத்து போன்றவற்றுக்கு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால்கூட முதலில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், பெரும்பாலானவர்களுக்கு கரோனா இருப்பதாகவே (பாசிட்டிவ்) முடிவுகள்வருகின்றன. இது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் 2 வாரத்துக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளித்த பிறகே மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கரோனா அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர்.
பாதிப்பு குறைந்ததா?
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், ஒருநாளுக்கு ரூ.20 ஆயிரம் முதல்ரூ.35 ஆயிரம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம்வசூலிக்கப்படுகிறது. உண்மையாகவே தொற்று இருக்கிறதா என உறுதிப்படுத்துவதில்லை. மருத்துவர்கள் சொல்வதை கேட்கும் நிலைதான் உள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. குறிப்பாக, ஐசியூவில் படுக்கை கிடைப்பதில்லை. கடந்த மாதம் வரை தினமும் 6 ஆயிரத்துக்கும் கீழாக பதிவான கரோனா பாதிப்பு தற்போது ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டும் அதே அளவே தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளி என்பதே இல்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசமும் அணிவதில்லை. இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை ஒரே அளவில் தொடர்வது நம்பும்படி இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சில தனியார் மருத்துவமனைகள் கரோனா காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் பார்க்கின்றன. அவை குறிப்பிடும் நபர்களுக்கு உண்மையாகவே கரோனா தொற்று இருக்கிறதா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதை தனியார் மருத்துவமனைகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. அறிகுறிகள் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் அங்குதான் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
கண்டிப்பாக நடவடிக்கை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதுடன் சமூகஇடைவெளியையும் கடைபிடிக்கின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால்தான் பொதுப் போக்குவரத்து அனுமதி அளித்த பின்னரும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகவசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா இருப்பதாக பொய் சொல்லி கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.