நிலஅளவைத்துறை சர்வர் பிரச்சினையால் புலப்படம் எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

நிலஅளவைத்துறை சர்வர் பிரச்சினையால் புலப்படம் எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Updated on
1 min read

நிலஅளவைத்துறை சர்வர் பிரச்சினையால் விவசாயிகள் புலப்படம் (எப்எம்பி) எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் பட்டா, புலப்படம், சிட்டா போன்ற விபரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமே பெற முடியும்.

இதனால் அவற்றை பெறுவதில் சிரமம் இருந்தது. அதை எளிமைப்படுத்தும் விதமாக வருவாய் மற்றும் நிலஅளவைத்துறை சார்பில் நிலப்பதிவேடு மின்னணு சேவை தொடங்கப்பட்டது.

இதையடுத்து eservices.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்றால் பட்டா, புலப்படம் (எப்எம்பி), சிட்டா போன்ற விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நிலம் வாங்குவதற்கு, நிலம் அளவீடு செய்வதற்கு, வேளாண்மை, தோடக்கலைத்துறை திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக சர்வர் பிரச்சினையால் புலப்படம் எடுக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீண்டும் கிராமநிர்வாக அலுவலர்களை தேடும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ பத்திரம் பதிவு செய்ததும் ஆன்லைனில் உடனடியாக பட்டா மாறுதல் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. விரைவில் சர்வர் பிரச்சினை சரியாகிவிடும்,’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in