உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
Updated on
1 min read

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்வதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் 6 யூனிட் கொண்ட ஒரு லோடு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆறு, கண்மாய், ஓடை அருகேயுள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள அனுமதி பெற்று மணலை கடத்தி வந்தனர்.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் மணல் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை.

மேலும் சில வாரங்களுக்கு முன் செய்களத்தூர் பகுதியில் செயல்பட்ட குவாரியில் மணல் அள்ளியதாக 17 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் திமுக ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல் மீது திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஆனால் அவரை கைது செய்யாததை அடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன்பிறகும் மாவட்டத்தில் மணல் கொள்ளை குறையவில்லை. மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியில் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணலை அள்ளி கடத்துகின்றனர்.

அந்த மணலை லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்கின்றனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in