Published : 23 Sep 2020 07:47 PM
Last Updated : 23 Sep 2020 07:47 PM

மதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு

மதுரை 

ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் மதுரை பெரியார் பஸ்நிலையம், வரும் டிசம்பரில் பஸ்கள் வந்து செல்வதற்கு திறக்கப்படுகிறது.

மதுரையின் மிக பழமையான பஸ்நிலையமாக பெரியார் பஸ்நிலையம் இருந்தது. ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையங்கள் வந்தப்பிறகு பெரியார் பஸ்நிலையும், அதன் அருகில் செயல்பட்ட காம்பளக்ஸ் பஸ்நிலையமும் மாநகர பஸ்கள் மட்டுமே வந்துசெல்வதற்கான பஸ்நிலையமாக மாற்றப்பட்டன.

ஆனாலும், இந்த பஸ் நிலையத்தின் மவுசு குறையாமல் தற்போது வரை மதுரையின் அடையாளமாகவும், மாநகரின் மையமாகவும் இருந்து வருகிறது. அருகில் ரயில்வே ஸ்டேஷனும் இருந்ததால் பெரியார் பஸ்நிலையத்தின் முக்கியத்துவம் தற்போது வரை குறையவில்லை.

இந்நிலையில் பெரியார் பஸ்நிலையத்தையும், காம்பளக்ஸ் பஸ்நிலையத்தையும் இடித்துவிட்டு, அதே இடத்தில் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் பஸ்நிலையம் போல் ரூ.158 கோடியில் பிரமாண்டமாக அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

பஸ்நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங் வளாகமும் தனியாக அமைக்கப்படுகிறது. அதற்காக தனி திட்டமும், நீதி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையம், இந்த செப்டம்பரில் முழுமையாக நிறைவு செய்து திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கரோனாவால் இடையில் 3 மாதம் பெரியார் பஸ்நிலையம் கட்டுமானப்பணி தடைப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடங்கினாலும் தற்போது வரை இப்பணிகள் நிறையவடையவில்லை.

தற்போது பெரியார் பஸ்நிலையத்தில் நடைமேடைகள் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளை விரைவாக முடித்து வரும் டிசம்பரில் பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்துசெல்வதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

மாநகராட்சி பொறியாளர் அரசு கூறுகையில், ‘‘பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 21ம் தேதி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், பஸ்கள் வந்துசெல்வதற்கு பஸ்நிலையம் டிசம்பரில் திறக்க ஏற்பாடு செய்கிறோம். கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பஸ்நிலையத்தில் உள்ள கட்டுமானப்பணிகள் மார்ச்சில் முடித்து அதன்பிறகு அதையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x