

காரைக்கால் அருகே புதிதாக குளம் வெட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது உலோகத்தினாலான 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே உள்ள சேத்தூர் பகுதியில் பிரதாப சிம்மேஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருவாசல் திடல் நிலப்பகுதியில் 4.5 ஏக்கரில், மத்திய அரசின் மகளிர் விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வட்டார வளர்ச்சித் துறை சார்பில் மகளிர் குழுவினர் பயன்பாட்டுக்காக கால்நடை வளர்ப்பு, தோட்டம் அமைத்தல், கோழி, ஆடு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் மீன் வளர்ப்புக்காக குளம் வெட்டுவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (செப். 23) பிற்பகலில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது இரண்டரை அடி ஆழத்தில் 2 சாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வட்டாட்சியர் பொய்யாத மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் டி.தயாளன், மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம், காவல் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் அந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து சிலைகளை எடுத்து சுத்தம்செய்து பார்த்தபோது, சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தினாலான வரதராஜப் பெருமாள், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் ஆகிய சுவாமி சிலைகள் எனத் தெரியவந்தது. கிருஷ்ணர் சிலையில் பீடம் உடைந்த நிலையில் இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்தோர் சுவாமி சிலைகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர். மாவட்ட துணை ஆட்சியரிடம் சிலைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை மாவட்ட ஆட்சியர் எம்.ஆதர்ஷ் கூறுகையில், "சிலைகள் கையகப்படுத்தப்பட்டு அரசு கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்ட பின்னரே சிலைகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்" என்றார்.