

கரோனா நோய்த்தொற்றினைத் திறம்பட எதிர்கொள்ள நிதி தேவைப்படுகிறது எனவும், இதுவரை ரூ.9.3 கோடி நிதி கிடைத்துள்ளது எனவும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செப். 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதியைத் திரட்டும் வண்ணம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கரோனா நிவாரண நிதி என்ற கணக்கு தொடங்கப்பட்டு நிதி பெறப்பட்டது. புதுவை மாநிலத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்ட பலர் இதற்கு நிவாரண நிதி வழங்கினர். இதுவரை 9 கோடியே 30 லட்சத்து 65 ஆயிரத்து 534 ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அத்துறைக்குத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வாங்குவதற்கு செலவீன ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ், ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டில்கள், ரூ.63 லட்சம் செலவில் சிறிய எக்ஸ்ரே இயந்திரங்கள், ரூ.63 லட்சம் செலவில் ஆர்.டி. பி.சி.ஆர். பொருட்கள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதியில் தற்போதைய இருப்பை விட அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. தொற்றுப் பரவலின் காரணமாக இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே, நிதித்தேவை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உலக மக்களின் மனம் கவர்ந்த புதுச்சேரி மாநிலம் கரோனா நோய்த்தொற்றினைத் திறம்பட எதிர்கொள்ள நிதி தேவைப்படுகிறது. எனவே, இந்த மாநிலத்தின் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள் அனைவரும் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும். இந்த இக்கட்டான தருணங்களைக் கடந்து மீண்டும் புதுப்பொலிவுடன் பரிணமித்து மகிழ்ச்சியான புதுச்சேரி மீண்டும் மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்".
இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.