

கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தை, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலும் பொதுமுடக்கமும் ஏழை மக்களின் பொருளாதாரத்திலும் மேல்தட்டு மக்களின் உளவியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் மற்ற தரப்பினரைவிடக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி, நண்பர்கள், விளையாட்டு, வீடு என்ற சூழல் மாறி, அன்றாடத் தேவைகளுக்கும் ஆன்லைன் வகுப்புக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கின்றனர். இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட, சிகிச்சையில் உள்ள, கோவிட் பரவலால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உளவியல் ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காகத் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தொலைபேசி மூலம் இலவசமாக உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பகிர்ந்துகொண்ட தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய அதிகாரி ஷீத்தல், ''நோய்த் தொற்று, கரோனா பரவல் அச்சம், பொதுமுடக்கம், பொருளாதாரப் பிரச்சினை எனக் குடும்பத்துக்குள் கரோனா கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், குழந்தைகளும் இளம் தலைமுறையினரும் கவலை, அச்சம், பதற்றம், மனச்சோர்வு, தூங்குவதில் சிரமம், பசியின்மை உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம்.
இதில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள், கடுமையான மன அழுத்தம், அதீத துக்கம் உள்ளிட்ட கூடுதல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இவர்கள் தனிமைப்படுத்தப்படும்போதும் இதே பிரச்சினை ஏற்படுகிறது. தங்களுக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் என்பதையே அறிந்திராத சூழலில், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை அவசியமாகிறது.
இதை உணர்ந்து சம்வேத்னா (SAMVEDNA- உணர்வுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளல் மூலம் மனநலனில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உணர்தல்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில், குழந்தைகளிடையே ஏற்படும் உளவியல் சிக்கல்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குகிறோம்.
இத்திட்டத்தின் கீழ் நிபுணத்துவம் பெற்ற மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவர். 18 வயதுக்கு உட்பட்டோருக்குப் பாதுகாப்பான சூழலில் இலவச ஆலோசனை வழங்கி வருகிறோம்.
இதற்கான இலவச தொலைபேசி எண்: 18001212830. இந்த எண்ணை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 8 மணி வரையிலும் அழைக்கலாம்.
இதுவரை ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்துள்ளன. கரோனா காலத்தில் இச்சேவையைத் தடையின்றி, தொடர்ந்து வழங்க உள்ளோம்'' என்று தெரிவித்தார்.