

பாரதிய ஜனதா தமிழக மாநில தலைவர் முருகன் குமரி மாவட்டம் வந்தபோது 144 தடை உத்தரவை மீறி வாகன பேரணி சென்றதாக பாஜகவினர் 970 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பருத்திக்காட்டுவிளையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 21ம் தேதி மாலை அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் வந்திருந்தார்.
அவருக்கு மாவட்ட எல்லையான முப்பந்தல் பகுதியில் இசக்கியம்மன் கோயில் முன்பு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவரை கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் ஊர்வலமாக சென்று கூட்டம் நடைபெற்ற முளகுமூட்டிற்கு அழைத்து சென்றனர்.
கரோனா ஊரடங்கால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அவற்றை மீறியதாக ஆரல்வாய்மொழி, தக்கலை காவல் நிலையங்களில் பாரதீய ஜனதாவினர் 970 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.