

இன்னும் 6 மாதங்களில் திமுக ஆட்சி அமைக்கும் எனவும், மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனவும், அக்கட்சியின் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குண்டூர் எம்.ஐ.இ.டி பகுதியில் 'எல்லோரும் நம்முடன்' என்ற திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (செப். 23) நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, "கரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தாலும், நம்மால் முடிந்த உதவியை 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் செய்தோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைத் தேடிச் சென்று நல்லது செய்தவர்கள் நாங்கள்.
இன்னும் 6 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அப்போது பொதுமக்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிச்சயம் செய்து கொடுப்போம்" என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.