

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது.
செந்துறை அருகேயுள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதியர் விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி மகன் விக்னேஷ் (19), நீட் தேர்வு அச்சத்தில் கடந்த 9-ம் தேதி கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துத் தகவலறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், விக்னேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், எலந்தங்குழியில் இன்று (செப். 23) நடைபெற்ற விக்னேஷ் படத்திறப்பு விழாவில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.திருமாவளவன் கலந்துகொண்டு விக்னேஷ் படத்தினைத் திறந்து வைத்து, மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, விக்னேஷ் பெற்றோரிடம் பாமக சார்பில் ரூ.10 லட்சம் தொகையினை வழங்கினார். படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டச் செயலாளர் ரவிசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சாமிதுரை உட்பட பாமக நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.