சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் அள்ள தடை கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் அள்ள தடை கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் அள்ள தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான மணல் குவாரிகள் செயல்படுகின்றன. கரோனா ஊரடங்கில் சவுடு, கிராவல் மண் எடுக்க பலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சாலை அமைக்க, பாலம் கட்ட என பல்வேறு காரணங்களை கூறி உரிமம் வழங்கப்படுகிறது.

300 கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்க அனுமதி பெற்று, 3000 முதல் 5000 கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கின்றனர். கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தனக்கு வேண்டியவர்களுக்கு மண் அள்ள உரிமம் வழங்கி வருகிறார். எனவே சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதித்து, குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குழு அமைத்து ஆய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, தமிழக கனிமவளத்துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ. 18-க்கு ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in