

குளித்தலை அருகே இடுகாட்டுக்குச் செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை நாவலக்காபட்டியைச் சேர்ந்த எம்.குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
வடசேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட நாவலக்காபட்டியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் மண்பாண்டம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட வேளாளர் சமூகத்தினர்.
நாவலக்காபட்டி மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கு இடத்தை பூவாயிப்பட்டியைச் சேர்ந்த சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து, கால்நடை கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இடுகாட்டுக்குச் செல்ல ஊராட்சி சார்பில் சிமெண்ட் ரோடு அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மட்டும் சிமெண்ட் ரோடு அமைக்கவில்லை. இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி அதிகாரிகள் நத்தம் புறம்போக்கு ஆக்கிரமிப்பை நேரில் வந்து பார்வையிட்டனர். இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நாவலக்காபட்டியில் நத்தம் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெ.பாலமீனாட்சி வாதிடுகையில், ஆக்கிரமிப்பாளர்களால் நாவலக்காபட்டி கிராம மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். பொதுமக்களை ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி வருகின்றனர். வருவாய்த்துறையினர், காவல்துறையினர் என மாறி மாறி புகார் அளித்தும் ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதையடுத்து மனு தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை வட்டாட்சியர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், வடசேரி ஊராட்சித் தலைவர், தோகைமலை காவல் ஆய்வாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.