

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் விவசாயிகள் வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாய வேலைகள் செய்து வருகின்றனர்.
விவசாயப் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசி ப் பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியிலுள்ள விவசாயிகள் தங்களின் வயல்களில் கருப்புக்கொடி ஊன்றி எதிர்ப்பு தெரிவித்து விவசாய வேலைகள் செய்து வருகின்றனர்.
புதிய வேளாண் மசோதாவால், விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும் தனியார் முதலாளிகள் அதிக லாபம் பெறவும் விளைபொருட்களை பதுக்கி வைக்கவும் , விலையேற்றத்திற்கு மத்திய அரசு துணை போகிறது என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.