

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை போலீஸார் தொடங்கினர்.
குழுவுக்கு 5 பேர் வீதம் 6 குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு திசையன்விளை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் ஆள் கடத்தல் கொலை வழக்கு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி திரிபாதி கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இதுவரை சின்னதுரை மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமண வேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை இதுவரை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழக்கின் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அணில் குமாரிடம் இன்று ஒப்படைத்தார். இதனையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்கினர்.
வழக்கு பின்னணி:
சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). தண்ணீர் கேன் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரது தாய் எலிசபெத் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட செல்வன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செல்வனின் மனைவிக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொத்து பிரச்சினை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். இந்த கொலை வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான அதிமுக நிர்வாகி திருமணவேல் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளராக இருந்து வந்த திருமணவேல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.
தற்போது, இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.