Published : 23 Sep 2020 11:58 AM
Last Updated : 23 Sep 2020 11:58 AM

பரவசமூட்டும் ட்ரோன் படங்கள்: யானைகளைக் காக்கவா, பிரச்சினையைத் திசை திருப்பவா?

அதி அற்புதமான படம் அது. அடர்ந்த காட்டுக்குள் 22 யானைகள் மேயும் காட்சி, கோவை வனத்துறையினர் மூலம் ட்ரோன் கேமரா மூலமாகப் படமெடுக்கப்பட்டு, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இந்தப் படம் வைரலாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து கோவை பெரியதடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ள வனப்பகுதியையும் சுற்றிச் சுற்றிப் படமெடுத்திருக்கிறது ட்ரோன். வழியெங்கும் படிக்கட்டுகள். உயரே, உயரே கோயில்… அதைச் சுற்றிலும் வியாபித்திருக்கும் மரங்கள். எங்கெங்கும் பசுமை. இந்தக் காட்சிகளும் வைரலாகியிருக்கின்றன.

இதன் மூலம் ‘காடு, காடாக இருக்கிறது. யானைகள் கூட்டம் கூட்டமாக வனத்துக்குள் மேய்கின்றன. அவற்றின் பாதுகாவலனாக வனத்துறை இருக்கிறது’ என்றொரு ‘மைண்ட் வாய்ஸ்’ பார்ப்பவர் மனங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ‘இது அழகைக் காட்டி அவலத்தை மறைக்கும் முயற்சி’ எனும் விமர்சனம் வன உயிர் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எழுந்திருக்கிறது.

“கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் கோவை வனப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்திருக்கின்றன. அதிலும் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து நான்கைந்து யானைகள் இறந்துள்ளன. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவலாக இருப்பதால், அதைத் திசை திருப்புவதற்காகவே இந்தப் படங்களையும் காணொலிகளையும் வனத்துறையினர் வெளியிடுகிறார்களோ எனச் சந்தேகிக்கிறோம்” என்கின்றனர் அவர்கள்.

வனப்பேருயிரின் மரணம்

கோவை வனக்கோட்டமானது கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கியது. 711.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, புலி, செந்நாய், கழுதைப்புலி, யானை, குரங்கு எனப் பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. காடுகள், விவசாய நிலங்கள் சுருங்கி, குடியிருப்புகள் பெருகுவதால் இங்கே யானை - மனித மோதலும் தொடர்கிறது. மனித மரணங்களும், வனவிலங்குகள் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அனுவாவி கோயில் ட்ரோன் படம்

குறிப்பாக, வனப்பேருயிரான யானைகள் இறப்பு சொல்லி மாளாத துயரமாக இருக்கிறது. ‘யானை இறந்தால், காடுகள் அழியும்; காடுகள் அழிந்தால் மற்ற விலங்குகளும் அழியும், இவை அழிந்தால் சூழல் கெடும், மனித குலமும் அழியும். எனவே, இந்த உயிர்ச் சங்கிலியைக் காக்க வேண்டும்’ என்று தொடர்ந்து போராடி வருகின்றனர் சூழலியலாளர்கள். ‘வனத்தைக் காக்கிறோம்; யானை உள்ளிட்ட வனவிலங்குகளைக் காக்கிறோம்’ என வனத் துறையினர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் யானைகள் இறப்பு நிதர்சனமாகி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் கேரளத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடி (காட்டுப் பன்றிகளுக்கு வைக்கும் அவுட்டுக்காய் வெடி) வெடித்ததில் காயமடைந்து கர்ப்பிணி யானை மரணமடைந்தபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல், கேரள - தமிழக எல்லையில் கோவை ஆனைகட்டி, ஜம்புகண்டி என்ற மலைகிராமத்தில் கடந்த ஜூன் 22-ம் தேதி 12 வயது ஆண் யானை இறந்தது. வாயில் அடிபட்ட நிலையில் எதுவும் சாப்பிட முடியாமல் பல நாட்கள் சுற்றித் திரிந்த அந்த யானை, வனத் துறையினர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே மரணமடைந்தது. ‘சின்னக்கொம்பனான அந்த யானை, தன் கூட்டத்தில் பெரியகொம்பன் யானையுடன் விளையாடியதில் தாடையில் காயம்பட்டு உயிரிழந்திருக்க வேண்டும்’ என்று வனத் துறையினர் காரணம் சொல்ல, வன ஆர்வலர்களோ ‘அவுட்டுக்காய் வெடிதான் காரணம்’ என்றனர்.

அதைத் தொடர்ந்து அதே ஜூன் மாதத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை டேம் காடு பகுதியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு யானைகள் இறந்தன. ‘யானைகளுக்கு வயிற்றில் குடற்புழு’ என்று வனத்துறை காரணம் சொன்னது. கடந்த ஜூலை 2-ம் தேதி சிறுமுகை லிங்காபுரம் வனப்பகுதியில் ஒரு யானையும், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே ஒரு பெண் யானையும் இறந்து கிடந்தன. லிங்காபுரத்தில் இறந்த யானை ரொம்பவும் மெலிந்திருந்தது. ‘தீவனம் இல்லை. அதில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு’ என்ற காரணம் சொல்லப்பட்டது.

ஐடிசி பம்ப் ஹவுஸ் பகுதியில் இறந்து கிடந்த யானைக்குக் காதோரம் ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. அதன் காதுகளைத் துளைத்து மூளைக்குள் ஒரு ஈயத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

‘இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு வரும் யானைகள் சில விவசாயிகளால் ஈயக்குண்டு துப்பாக்கியால் சுடப்படுகின்றன. உடலில் குண்டு காயத்துடன் திரியும் யானைகள், காயம்பட்ட இடத்தில் ‘செப்டிக்’ ஆகி இறக்கின்றன. ஒரு சில நாட்கள் என்றில்லை; மாதக்கணக்கான பிறகுகூட இந்தக் காயங்களால் யானைகள் இறக்கின்றன. ஆனால், அவையெல்லாம் வயிற்றில் புண்; தீவனம் இல்லை என்ற காரணம் காட்டியே அடக்கம் செய்யப்படுகின்றன’ என்று வன உயிர் ஆர்வலர்கள் குமுறுகிறார்கள். இந்தப் பிரச்சினை கிளம்பிய நேரத்திலேயே சிறுமுகை டேம்காடு பகுதியில் மெலிந்து எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஓர் யானையும் இறந்தது.

பலனற்ற முயற்சிகள்

நிலைமை மோசமானதைத்தொடர்ந்து, யானைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு கமிட்டியை அமைத்தனர் வனத்துறை அதிகாரிகள். அதன் பின்னரும் யானைகளின் மரணங்கள் ஓய்வதாகத் தெரியவில்லை. கடந்த வாரம் ஆனைகட்டி சோலையூர் பகுதியில் ஒரு மக்னா யானை தள்ளாடித் தள்ளாடி வந்தது. வாயில் புண்ணுடன், நாக்கே இல்லாமல் இருந்த அந்த யானை, உணவை எடுத்துச் சாப்பிட முடியாமல் அங்கேயே கிடந்து உயிரை விட்டது. அவுட்டுக்காய் மூலம் அதற்கு ஏற்பட்ட கொடூர மரணத்தைக் கண்டு அந்த ஊரே கலங்கி நின்றது. காரமடை, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கிருந்து விரட்டப்பட்டே இங்கு வந்து உயிர்நீத்ததாக ஆனைகட்டிவாசிகள் சொல்கிறார்கள்.

இந்த மரணச்சுவடு மறைவதற்குள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வரும் நெல்லித்துறை காட்டில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இடது காலில் காயங்களோடு சுற்றி வருவது தெரிந்தது. அதை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து சிகிச்சையளிக்க, 2 கும்கி யானைகளோடு செப்டம்பர் 14-ம் தேதி அங்கே முகாமிட்டனர் வனத் துறையினர். எனினும் செப்டம்பர் 17-ல் அந்த யானையும் இறந்தது.

‘மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் மட்டும் கடந்த மார்ச் முதல் 9 யானைகள் இறந்திருக்கின்றன. அவற்றைச் சேர்த்து கோவை வனக்கோட்டத்தில் மொத்தம் 20 யானைகள் இறந்திருக்கின்றன’ என்று வன உயிர் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வனம் அழிக்கப்பட்டது, வன விலங்குகளுக்குப் போதிய தீவனம் இல்லாதது, வனத் துறையினரின் அலட்சியம் போன்றவையே இதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் வந்த கும்கிகள்.

இப்படியான சூழலில், அடுத்த இரண்டே நாட்களில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட யானைகளின் புகைப்படங்கள் ஊடகங்கள் வழியே வெளியிடப்பட்டிருக்கின்றன. இதுதான் வன உயிர் ஆர்வலர்களிடம் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

குற்றச்சாட்டும் விளக்கமும்

இதுகுறித்து பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளரும், சூழல் ஆர்வலருமான தனராஜிடம் பேசினோம். “20 யானைகள் இறந்ததற்கு என்ன காரணம்; இதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க; கண்காணிக்க ட்ரோன் கேமரா எந்த அளவு பயன்படுகிறது; இதன் மூலம் மனித விலங்கு மோதல் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைத்தான் வனத் துறையினர் சொல்ல வேண்டும். ட்ரோனில் படம்பிடித்து மக்களிடம் பரப்புவதெல்லாம் திசை திருப்பும் முயற்சி” என்றார் தனராஜ்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகர் செல்வராஜிடம் விளக்கம் கேட்டோம். “ஒரு யானை இறந்தால், பிரேதப் பரிசோதனை செய்து முறையான அறிக்கை கொடுக்கிறோம். தொடர் யானைகள் இறப்பு பற்றி தனியாகக் கமிட்டி போடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எப்படி வெளிப்படைத்தன்மையைக் கையாள்கிறோமோ அதையேதான் காடுகள் கண்காணிப்பு, வனவிலங்குகள் கண்காணிப்பிலும் செய்துவருகிறாம். அதில் ஒன்றுதான் ‘ட்ரோன்’ மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு.

காடு எப்படியிருக்கிறது, அதில் வனவிலங்குகள் என்ன நிலைமையில் இருக்கின்றன, அவை எப்போதெல்லாம் ஊரை நோக்கி வருகின்றன என எல்லாவற்றையும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சி இது. இது எப்படித் திசை திருப்பும் வேலையாகும்?” என்றார் வனச்சரகர் செல்வராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x