

திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை முருகானந்தபுரத்தைச் சேர்ந்தவர் யசோதா (67), வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்த கெளரவன் (59) ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இதில், கரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தும் வார்டுக்கு செல்லும் மின் கம்பி நேற்று துண்டானது. இதனால் கரோனா வார்டில் மின்சாரம் தடைபட்டது. அப்போது, ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு மேற்குறிப்பிட்ட இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, "மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை முதல் மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, செயற்கை சுவாசம் பயன்படுத்தும் கரோனா நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆக்ஸிஜன் கிடைக்காததால் இருவரும் உயிரிழந்துள்ளனர்" என்றனர்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்து, செய்தியாளர்களிடம் கூறும்போது, "மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று) காலை 11 மணியளவில், கரோனா வார்டுக்குச் செல்லும் மின் கம்பி துண்டிக்கப்பட்டதால், 40 நிமிடம் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மாற்று ஏற்பாடுகள் இருந்ததால், ஆக்சிஜன் தடைபடவில்லை. அவர்கள் உயிரிழப்புக்கு, மின்சாரம் இல்லாதது காரணம் இல்லை. தினமும் இரவு கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உடல் நிலை குறித்து குறிப்பு எடுக்கப்படும். அதேபோல், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாதவர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடப் பணியின்போது மின் கம்பி துண்டிக்கப்பட காரணமாக இருந்த, அலட்சியமாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மின்சாரம் தடைபட்டாலும், தேவையான ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. இறந்த இருவரும் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்துள்ளனர்" என்றார்.