

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அம்மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடி என்ற அளவுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டின்படி நீர்வரத்தின் அளவு 70 ஆயிரம் கனஅடியாக உயர்ந்திருந்தது. நேற்று மாலை வரை அதே அளவில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், பரிசல் இயக்குபவர்கள் ஆகியோர் ஆற்றுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அதிகாரிகள் ஏற்பாட்டில் அவ்வப்போது தண்டோரா அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர, வருவாய் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 89.77 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று காலை 91.45 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.32 டிஎம்சி-யாக உள்ளது.