குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நாகர்கோவில் காசியின் நண்பருக்கு ஜாமீன்: சிபிசிஐடி மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நாகர்கோவில் காசியின் நண்பருக்கு ஜாமீன்: சிபிசிஐடி மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

பெண்களிடம் பழகி ஆபாசப் படம் எடுத்த நாகர்கோவில் காசி வழக்கில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் காசியின் நண்பருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் மெத்தனமாகக் கையாள்வதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி(26). பெண் டாக்டர் உட்பட பல பெண்களைக் காதலிப்பதாகக் கூறி நெருக்கமாகப் பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக காசியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தினேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, வழக்கு விசாரணை நடைபெறுகிறது. மனுதாரரிடம் இருந்து லேப்டாப் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மனுதாரரும், அவரது நண்பரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும் சில வழக்குளில் மனுதாரர் சம்பந்தப்பட்டுள்ளார். எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

90 நாட்கள் கடந்தது

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் கடந்து விட்டன. இதுவரை சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி கூறும்போது, சிபிசிஐடி போலீஸார் வழக்கின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை?. விசாரணை முடியாவிட்டால் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கலாமே? விசாரணை மேலும் தாமதமானால் அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன் பெற வாய்ப்புள்ளது. எனவே சிபிசிஐடி டிஎஸ்பி நேரில் ஆஜராகி விசாரணை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

பின்னர், மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாகிறது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in