

காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட ராஜாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல் பரபரப்புடன் இயங்கியது. இந்த மார்க்கெட் திறப்புக்கு வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் ராஜாஜி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அங்கு இடநெருக்கடி இருந்ததால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. இதனால் ராஜாஜி மார்க்கெட் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மூடப்பட்டது. பின்னர் ஏப்ரல் 3-ம் தேதி முதல் வையாவூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கு மழையின்போது சேறும் சகதியும் ஏற்பட்டதால் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். எனவே, ஜூலை 23-ம் தேதி காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் உள்ள நசரத்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது.
தொலைவில் இருந்ததால்..
இந்தப் பகுதி காஞ்சிபுரம் நகரில் இருந்து தொலைவில் இருந்ததால் காய்கறிகள் வாங்க மக்கள் அதிக அளவில் செல்லவில்லை. இந்த மார்க்கெட்டுக்கு செல்ல மக்கள் சிரமம் அடைந்ததுடன், சரிவர வியாபாரம் இல்லாமல் வியாபாரிகளும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் ராஜாஜி மார்க்கெட் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வழக்கம்போல் வரத் தொடங்கினர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அருகில் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டதற்கு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.