

திருவள்ளூர் மாவட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பயோ மெட்ரிக் விற்பனை முனையக் கருவிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பயோ மெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க, அதற்கான கைரேகை கருவியுடன் இணைந்த புதிய விற்பனை முனையக் கருவிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவிக்கையில், “பயோ மெட்ரிக் திட்டத்தின்படி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று கைரேகையை பதிவு செய்து அத்தியாவசியப் பொருட்களை பெற்றுச் செல்லவேண்டும். இத்திட்டம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
பிறகு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், இளம் சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவியாக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை 119 சட்டப் பட்டதாரிகளுக்கு ரூ.59.50 லட்சம் அளவிலான காசோலைகளை ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் இலக்கியா, மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன் மற்றும்அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.