

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, அடையாறு ஆற்றில் நடைபெறும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
வருகிற வடகிழக்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு, அதை எதிர்கொள்ளும் வகையில்தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வரதராஜபுரம் மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் சீரமைப்பு கால்வாய் பணிகளை ஆட்சியர் நேற்று பார்வையிட்டார்.
அதேபோல் அடையாறு ஆற்றில்வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடியில் தடுப்பணை கட்டும் பணியையும் பார்வையிட்ட பின்னர்,பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.தர், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் குஜராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.