

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வேளாண் திருத்தச் சட்டங்களால் விளைபொருட்களை அரசுத் துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நிறுத்தப்பட்டுவிடும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைநிர்ணயிக்கும் வழக்கமும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் விவசாயிகளின் அச்சம். மசோதாக்களில் அதற்கான உத்தரவாதம் இல்லாத சூழலில், விவசாயிகளின் அச்சம் நியாயமானதே. விவசாயிகளின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவது அரசுகளின் கடமை.
இந்த சூழலில், விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில், நேரடி கொள்முதல் முறையும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறையும் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பை சட்டம் ஆக்கிவிட்டால், விவசாயிகளின் அச்சம் முழுமையாக நீங்கிவிடும்.
பெரும்பான்மையான செலவுகளை கணக்கில் கொள்ளாமல் உற்பத்தி செலவை மத்திய அரசு நிர்ணயம் செய்வதால்தான் கொள்முதல் விலை குறைவாக இருக்கிறது. தவிர, போதிய கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதும் இல்லை. இதனால், காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை சாலைகளில் கொட்டி, இரவு பகலாக காவல் காக்க வேண்டி உள்ளது.
எனவே, நாடு முழுவதும் அதிக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் விரும்பும் வரை இதை நீடிப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.