

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி ( ஐஜிஎஸ்டி) நிலுவைத் தொகையான ரூ.4,321 கோடியை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வணிகவரித் துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2017-18 ஆண்டுக்கான ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது மத்திய அரசால் மாநிலங்களுக்கு இன்னும் பகிர்ந்து அளிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத் தொகையில் தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் அமைச்சர்டி.ஜெயக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நடந்து முடிந்த 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப, 2017-18 ஆண்டுக்கான ஐஜிஎஸ்டி தொகையை பகிர்ந்தளிப்பது தொடர்பான பரிந்துரை வழங்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் 2-வது கூட்டம் பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தலைமையில் நேற்று நடந்தது. குழுவின் உறுப்பினரான தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், நிலுவை ஐஜிஎஸ்டி தொகையை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக அடுத்துவரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து, நிலுவைத் தொகையை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.