

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலின் சுற்றுப்புறங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டும், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டும் வருகின்றன. இதனால், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், கோயிலின் பாதுகாப்பு கருதி, அர்ஜூனன் தபசு மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகிய குடவரை சிற்பங்களை மறைக்காத வகையில் சுற்றுச்சுவர் அமைக்க தொல்லியல் துறையின் ஒப்புதல் கோரப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட கமிட்டியில் தொல்லியல் துறையின் வடிவமைப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்ததும், தொல்லியல் துறை இப்பணிக்கு ஒப்புதல் வழங்கியது. இதன்பேரில், அறநிலையத் துறை ஆணையர் நிதியிலிருந்து ரூ.22.83 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்தலசயன பெருமாள் கோயிலின் பின்னால் உள்ள அர்ஜூனன் தபசு உள்ளிட்ட குடவரை சிற்பங்களை மறைக்காத வகையில், 3 அடி உயரத்தில் சுவரும், அதன்மேல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 2 அடி உயரத்தில் இரும்புவேலிகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.