

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு நடத்தியது. பல்வேறுமாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், 2,673 (21.5%) பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. இதேபோல், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இரண்டாவது ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் பரவலாக 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் கரோனா தொற்று நிலை தொடர்பாக மாநில அளவில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதன்படி 30 ஆயிரம் பேருக்கு ரத்த சோதனை செய்யப்படும். எத்தனை பேருக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று கண்டறியப்படும். இதன்மூலம் கரோனா பாதிப்பின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். இம்மாத இறுதியில் இந்தஆய்வு தொடங்கப்படும்’’என்றனர்.