Published : 22 Sep 2020 06:08 PM
Last Updated : 22 Sep 2020 06:08 PM

தமிழக சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்; ஆளுநர் அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து இருப்பதாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இச்சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

"மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான 3 சட்டத் திருத்தங்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் மிக மோசமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதனைக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி எடுத்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதேபோன்ற விவசாயிகளின் நலனுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒப்பந்த சாகுபடிச் சட்டம் என்கிற பெயரில் ஒரு புதிய சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

மத்திய அரசு உள்நோக்கத்தோடு நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே தமிழக சட்டப்பேரவையைச் சோதனைக் களமாகப் பயன்படுத்தி உள்ளதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நகர விரிவாக்கத் திட்டங்கள், ஊரக விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான விளை நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்கவோ அனுமதி பெறவோ தேவையில்லை என்கிற ஒரு அவசரச் சட்டத்தையும் தற்போது தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

கரோனா தாக்குதலால் இரண்டு தினங்கள் மட்டுமே சட்டப்பேரவை அலுவல் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவசர கதியிலேயே 19 அவசரச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகுந்த சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறபோது அதற்கு இணையான, மிக மோசமான, விளைநிலங்களை அபகரிக்கக் கூடியதும், விவசாயிகளை அகதிகளாக மாற்றக்கூடியதுமான நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டியதில்லை என்ற ஒரு கருப்புச் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது விவசாயிகளுக்குச் செய்திருக்கிற மிகப்பெரிய துரோகம்.

இவ்விரு சட்டங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டதா? என்பதைத் தெளிவுபடுத்தாத நிலையில், இந்த அவசரச் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

விளைநிலங்களை அபகரித்து சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களுக்கு நீதிமன்றத் தடைகள் நீக்கப்பட்டு எந்தக் கேள்விக்கும் இடமில்லாமல் காவல்துறையை வைத்து நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், விவசாயிகளைத் துன்புறுத்துவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கும்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களோடு உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, இந்தச் சட்டத் திருத்தங்கள் குறித்து முழுமையாக சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாத நிலையில் அவற்றிற்கு ஆளுநர் அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும். இல்லையேல் தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க முடியாது''.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x