Published : 22 Sep 2020 06:03 PM
Last Updated : 22 Sep 2020 06:03 PM

ஸ்டாலினுக்கு மத்திய அரசின் வேளாண் சட்டமே என்னவென்று தெரியவில்லை; ஏன் ஆதரிக்கிறோம்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியவில்லை. நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்று முதல்வர் பழனிசாமி விளக்கிக் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

“அரசு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி எடுத்த நடவடிக்கை காரணமாக நோய்ப் பரவல் குறைந்துள்ளது. அதிக அளவில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட காரணத்தால், நோய் கண்டறியப்பட்ட காரணத்தால், தமிழகத்தில் முதலில் இருந்த நிலை மாற்றப்பட்டு குணமடைந்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்னும் இந்த நோய்க்கு முழுமையாக மருத்து கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் நமது மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனை காரணமாக நோய்ப் பரவல் தடுக்கப்படுகிறது.

விவசாயிக்கான அரசு வேளாண் மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது, திமுக விமர்சிக்கிறது. அதிமுக ஏன் ஆதரிக்கிறது என்பதைப் பற்றி விளக்க வேண்டுமானால் 6, 7 பக்கங்கள் நீளும். அந்தச் சட்டத்தைப் பற்றியே தெரியாமல் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயன்தரும் சட்டமாகத்தான் கருதப்படுகிறது. அதனால்தான் ஆதரிக்கிறோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான எந்தச் சட்டத்தையும் ஆதரிக்கும். எதிராக உள்ள எதையும் எதிர்ப்போம். அந்த வகையில் இந்த மூன்று சட்டங்கள் குறித்து விளக்குகிறேன்.

1. விலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்தில் விவசாயிகள் அவசரச் சட்டம்

இது ஏற்கெனவே தமிழகத்தால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் காடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள் ஊக்குவிப்புச் சட்டம் 2019-ஐ ஒட்டியே உள்ளது.

அந்தச் சட்டத்தை ஒட்டிதான் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டம் முன்னர் முறைசாரா ஒப்பந்தப் பணியை ஒழுங்குபடுத்துவதோடு, விவசாயத்தை விலை வீழ்ச்சியிலிருந்து காக்கும். எளிதில் அழுகும் வேளாண் பொருட்கள் கொள்முதல் குறையும்போது, அல்லது கொள்முதலே இல்லாமல் தேங்கும்போது விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவர்.

இச்சட்டத்தின்படி விவசாயிகள் ஒப்பந்தத்தில் பங்குபெற விரும்பினால் வேளாண்மை துணை இயக்குனர் முன்னிலையில் கொள்முதலாளருடன் ஒப்பந்தம் செய்யப்படும். இதன்மூலம் இரு தரப்பிலும் ஒளிவுமறைவற்ற நிலை ஏற்படும்.

தேவைப்படின் ஒப்பந்தம் செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு, விதைகள், இடுபொருட்கள், பயிர்க் காப்பீடு, பயிர்ப் பராமரிப்பு மற்றும் அறுவடைச் செலவுகளுக்கு உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளைபொருள் நிர்ணயிக்கப்பட்ட தரம் மற்றும் அளவில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் என்பதால் உணவு பதப்படுத்தும் தொழில் நன்கு மேம்படும். இதன் மூலம் எளிதில் அழுகும் பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறுவர்.

ஒப்பந்த ஷரத்தின் மூலம் விவசாயி தானாக முன் வந்து ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் கட்டாயமும் இல்லை. பயிர் சாகுபடி செய்வதற்கு முன்னரே விலை நிர்ணயிக்கப்படும். இதனால் அறுவடை ஆகும்போது வியாபாரி அதே விலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனால் விவசாயிகள் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட மாட்டார்கள். விலை உயர்ந்தாலும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிக்கும் நிலை ஏற்படும். அது ஒப்பந்தத்தில் இருக்கிறது. சந்தை விலை குறைந்தாலும் ஒப்பந்த விலை கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பற்றி எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டாலினுக்கு ஷரத்தே தெரியவில்லை. விவசாயியாக இருந்தால்தானே இதெல்லாம் அவருக்குத் தெரியும். தக்காளி விலை பார்த்திருப்பீர்கள். 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விலை வீழ்ச்சி ஏற்படுவதைப் பார்க்கிறோம். அதில் ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போடும்போது அந்த விலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொள்முதல் செய்பவர் விவசாய நிலத்தில் எந்தவித உரிமையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு என்றெல்லாம் தவறாகச் சொல்கிறார்கள். கொள்முதல் செய்யும்போது என்ன பொருள் வாங்கினாலும் ரசீது கொடுக்க வேண்டும். இது அந்த ஷரத்தில் உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என ஸ்டாலின் விளக்க வேண்டும்.

2. விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் அவசரச் சட்டம்.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலை விவசாயிகள் விரும்பும் இடத்தில் விளைபொருட்களை விற்கலாம் என்ற சட்டம். இது ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இது மற்ற மாநிலங்களில் இல்லாததால் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் உழவர்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சாகுபடி இடத்திலேயே கொள்முதல் என்பதால் விவசாயிகளுக்கு போக்குவரத்துக் கட்டணம், சுமைக் கட்டணம் மிச்சம். வணிகப் பரப்பில் நடக்கும் வணிகத்திற்கு சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது உழவர் சந்தைக்கு எதிரானது என்கிற கூற்று சரியல்ல. உழவர் நுகர்வோர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் உழவர் சந்தைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து தவறாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அது உண்மையில்லை.
மின்னணு வர்த்தகம் மூலம் அகில இந்திய அளவில் விவசாயிகள் விற்பனை செய்யமுடியும் என்பதால் இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை விவசாயிகள் விற்கலாம். எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். உழவன் ஆப் மூலம் இது சாத்தியமாகும். சந்தைக் கட்டண வரி வசூலிக்கக் கூடாது.

பஞ்சாப், ஹரியாணாவின் முக்கிய விளைபொருளான நெல், கோதுமையை விற்க வேண்டும் என்றால் 3 சதவீதம் மார்க்கெட் வரி, 3 சதவீதம் உள்ளாட்சி வரி, இடைத்தரகர்களுக்கு 2.5 சதவீதம் வரி என மொத்தம் 8.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

8.5 சதவீதம் ஒரு வியாபாரி கொள்முதல் செய்யும்போது கொடுக்க வேண்டும். இதைத்தான் ஸ்டாலின் எதிர்க்கிறார். இந்த எதிர்ப்பின் மூலம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் லாபம் போய்விடுகிறது. அதனால் இடைத்தரகர்கள், பஞ்சாப் அரசு இதை எதிர்க்கிறார்கள். அங்குள்ள நிலை வேறு நம் நிலை வேறு. அங்கு பொய்யான ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டதால் அங்குள்ள விவசாயிகள் அவர்கள் பயத்தினால் போராட்டம் நடத்துகிறார்கள். குறைந்தபட்ச ஆதாரக் கொள்முதல் விலை நிறுத்தப்படாது.

பிஹாரைப் பொறுத்தவரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 2006-ல் மூடிவிட்டது. தனியார்கள் உள்ளதால் சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 282 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வெகுவாக நடக்கின்றன. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மேலும் மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உளுந்து, துவரை, பச்சைப்பயிறு, தேங்காய் உள்ளிட்டவற்றிற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை கிடைத்தாலும் வெளிச்சந்தையில் விற்று நல்ல லாபம் பெறுகிறார்கள்.

இப்பொருட்கள் ஆதார விலைக்குக் கீழ் செல்லும்போது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனைச் சந்தை மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வெளிச்சந்தை விலை அதிகரித்து விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. இதை ஏன் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. தேடித்தேடி பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து எதுவும் இல்லை என்றாலும் இதை எதிர்க்கிறார்.

3. அத்தியாவசியப் பொருட்கள் அவசரச் சட்டம்

வேளாண் பொருட்கள் இருப்பு குறித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, தானியம், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் விளைபொருட்கள் போர் உள்ளிட்ட பேரிடர்க் காலங்களில் கட்டுப்பாடு விதிக்க அரசில் அறிவிக்கச் செய்து வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி தோட்டக்கலை பொருட்களின் விலை ஏற்றம் 100 சதவீதம் விலை உயரும்போதும், வேளாண் விளைபொருட்கள் விலை 50 சதவீதம் விலை உயரும்போதும் அவற்றின் இருப்பு அளவினை நெறிப்படுத்த முடியும் என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில் மார்க்கெட் வரி ஒரு சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தினால் விவசாயிகள் யாருக்கும் பாதிப்பில்லை. புதிய சட்டத்தால் விவசாயிகளை வீழ்ச்சியில் இருந்து காக்க முடியும். அதனால் இச்சட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x