

சேலம் அருகே சங்ககிரியில் நின்றிருந்த ஆம்னி வேன் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்ககிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த கம்பி கட்டும் கூலித் தொழிலாளர்கள் 35 பேர், கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக ஆம்னி வேனில் புறப்பட்டு வந்தனர். ஆம்னி வேனை கொல்கத்தாவைச் சேர்ந்த முகமது சல்மான் ஓட்டி வந்துள்ளார். அவருக்கு உதவியாக அக்தர், தீபக் உடன் வந்துள்ளனர். இவர்கள் முறையாக இ-பாஸ் பெற்று தொழிலாளர்களை ஆம்னி வேனில் அழைத்து வந்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இன்று (செப்.22) காலை 6 மணிக்கு கோவை சாலையில் உள்ள கலியனூர் பிரிவு ரோட்டில் வந்து கொண்டிருந்த ஆம்னி வேனின் முன் டயர் திடீரென பஞ்சர் ஆனது. அப்போது, ஓட்டுநர் முகமது சல்மான் சாலை ஓரமாக ஆம்னி வேனை நிறுத்திவிட்டு, உதவியாளர்கள் அக்தர், தீபக்குடன் பஞ்சரான டயரைக் கழட்டி, பின்புறம் வைத்துவிட்டு, மாற்று டயரை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சேலம்-கோவை சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, ஆம்னி வேனின் பின்புறம் மோதியது. இதில், முகமது சல்மான், அக்தர், தீபக் ஆகிய மூவரும் சிக்கி, பலத்த காயம் அடைந்தனர்.
வேனில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விபத்து நடந்ததை அறிந்து எழுந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் உள்ளிட்ட உதவியாளர்களை மீட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் முகமது சல்மான் உயிரிழந்தார்.
சங்ககிரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு, பலத்த காயம் அடைந்திருந்த தீபக், அக்தர் இருவரையும் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அக்தர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சங்ககிரி காவல் துறையினர் விபத்துக்குள்ளான ஆம்னி வேனை 'ரெக்கவரி' வேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி ஓரம் கட்டி, போக்குவரத்தைச் சீர்செய்து அனுப்பி வைத்தனர். கட்டிடப் பணிக்காக வந்த 35 தொழிலாளர்களையும் மாற்று வாகனத்தில் கேரளாவுக்குக் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியை வாழப்பாடி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜமன்னார் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரும் விபத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.