Published : 22 Sep 2020 05:03 PM
Last Updated : 22 Sep 2020 05:03 PM

கரோனா தொற்றைத் தடுக்கும் மலிவு விலை மருந்துப் பெட்டகம் விற்பனை; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

மலிவு விலை மருந்துப் பெட்டக விற்பனையைத் தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர்

கரோனா தொற்றைத் தடுக்கும் மலிவு விலை மருந்துப் பெட்டக விற்பனையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சித்த மருந்துப் பொருட்கள் அடங்கிய மலிவு விலை மருந்துப் பெட்டகங்கள் விற்பனை, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் கரூர் பேருந்து நிலையத்தில் இன்று (செப். 22) நடைபெற்றது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மலிவு விலை மருந்துப் பெட்டகங்கள் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமார் 5 டன் எடையுள்ள கபசுரக் குடிநீர் சூரணப்பொடிகள் தமிழ்நாடு மருத்துவத் தாவரப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சித்த மருத்துவ அலுவலர்களின் முன்னிலையில் முறையாக காய்ச்சப்பட்டு வீடு, வீடாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பகுதிகளில் பொதுமக்களுக்கு 4 முறை வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் ஆற்றல் கொண்ட 15 வகையான மூலிகைகள் அடங்கிய கபசுரக் குடிநீருக்கான சூரணப்பொடி 500 கி. ரூ.4.76 லட்சம், ஆடாதொடை மணப்பாகு 1,000 லி. ரூ.2.05 லட்சம், தாளிசாதி சூரணம் 1 லட்சம் மாத்திரை ரூ.3.43 லட்சம், அமுக்கரா சூரணம் 1 லட்சம் மாத்திரை ரூ.1.13 லட்சம் என மொத்தமாக ரூ.11.37 லட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த மருந்துப் பொருட்களை 5 நபர் கொண்ட ஒரு குடும்பம் 5 நாட்களுக்கு உட்கொள்ளும் வகையில் 50 கி. கபசுரக் குடிநீருக்கான சூரணப்பொடி, 100.மி.லி. ஆடாதொடை மணப்பாகு, 50 அமுக்கரா சூரணம் மாத்திரைகள், 50 தாளிசாதி மாத்திரைகள் என தனித்தனி மருந்துப் பெட்டகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.150 ஆகும். ஆனால், பொதுமக்களின் நலன் கருதி ரூ.100-க்கு இந்த மலிவு விலை மருந்துப் பெட்டகம் விற்கப்படவுள்ளது.

தற்போது முதற்கட்டமாக கரூர் பேருந்து நிலையத்தில் இந்த மலிவு விலை மருந்துப் பெட்டக விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள பேருந்து நிலையங்கள், அம்மா மருந்தகங்கள், அம்மா உணவங்களில் இந்த மலிவு விலை மருந்துப் பெட்டக விற்பனை நிலையங்கள் விரிவுபடுத்தப்படும்.

அனைத்துப் பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. கரோனா தொற்று குறைய பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x