Published : 22 Sep 2020 04:45 PM
Last Updated : 22 Sep 2020 04:45 PM

இந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு: சர்ச்சையில் சிக்கிய வங்கி மேலாளர் இடமாற்றம்

மருத்துவர் பாலசுப்ரமணியம்.

சென்னை

வங்கியில் கடன் கேட்ட மருத்துவரிடம், இந்தி தெரியுமா? இந்தி தெரியாவிட்டால் கடன் இல்லை என்று மறுத்து சர்ச்சையில் சிக்கிய வங்கி மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அப்பகுதியில் புகழ்பெற்ற மருத்துவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது சொந்த ஊரான கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி வாடிக்கையாளராக இருந்துவருகிறார்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட மருத்துவர் பாலசுப்ரமணியம் முடிவெடுத்துள்ளார். இதற்காகத் தான் பல ஆண்டுகள் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

சமீபத்தில் வங்கிக்குச் சென்ற மருத்துவர் பாலசுப்ரமணியம், வங்கியின் மேலாளர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவரிடம் தனது ஆவணங்கள், வரவு செலவுக் கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை அளித்து கடன் நிலை குறித்துக் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், 'உங்களுக்கு இந்தி தெரியுமா?' எனக் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் பாலசுப்ரமணியம், 'எனக்கு இந்தி தெரியாது. ஆனால், தமிழும் ஆங்கிலமும் தெரியும்' எனக் கூறியுள்ளார்.

'நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன். எனக்கு இந்தி தெரியும். உங்களுக்கு இந்தி தெரியாதா?' என வங்கி மேலாளர் மீண்டும் கேட்டுள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களைக் காண்பித்து, 'இதே வங்கிக் கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வங்கிக் கடன் அளிக்க மேலாளர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது எனத் தெரிவித்ததாக மருத்துவர் பாலசுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மொழி பிரச்சினை காரணமாக கடன் தர மறுத்தது குறித்துப் பேட்டி அளித்த மருத்துவர் பாலசுப்ரமணியம், இந்தி தெரியாததால் கடன் மறுத்தது குறித்து தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகத் தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது. திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வங்கி மேலாளர் விஷால் நாராயண் காம்ப்ளேவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அவரை திருச்சி மண்டல அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும், உடனடியாக அங்கு சென்று பணியில் இணையும்படியும் தலைமை மேலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவருக்கு வங்கிக் கடன் உண்டா அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பது குறித்து வங்கி நிர்வாகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x