இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் விசைப்படகு: ஆபத்தில் இருக்கும் 11 மீனவர்களை மீட்கக் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப் படகு பழுதானதால் அதிலிருக்கும் 11 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த றைமண்ட் என்பவரின் மகன் ததேயூஸ். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் ததேயூஸ் உட்பட 11 பேர் தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடந்த 14-ம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனர். இவர்கள் கேரளக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது செப்டம்பர் 20 -ம் தேதி இரவு 9 மணியளவில் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நின்றுபோனது.

இதனால் படகில் இருந்த 11 மீனவர்களும் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளிட்ட பொருள்களை இருப்பு வைத்திருக்கும் நிலையில் இரண்டு நாள்களாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களிடம் இருப்பு இருக்கும் உணவுப் பொருள்களும் தீர்ந்துவிடும் நிலை உள்ளது.

இந்தப் படகில் சின்னத்துறை கிராமத்தைச் சார்ந்த ததேயூஸ், சேவியர், ரதீஷ், வள்ளவிளை கிராமத்தைச் சார்ந்த பிர்னடாஸ், அனில், லூயிஸ், சிலுவை, நிக்கோலாஸ், இரவிபுத்தன் துறையைச் சார்ந்த மோனு, திருவனந்தபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் ரதிஸ் ஆகிய மீனவர்கள் உள்ளனர்.

அந்தப் படகு இப்போது கேரளாவின் அழிக்கால் துறைமுகத்திலிருந்து சுமார் 20 நாட்டிகல் மைல் தூரத்தில் கடலில் மிதப்பதாகச் சொல்லப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் படகையும் 11 மீனவர்களையும் மீட்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, தமிழக முதல்வருக்கும், மீன் வளத்துறை உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in