Published : 22 Sep 2020 04:27 PM
Last Updated : 22 Sep 2020 04:27 PM

''விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பாஜக - அதிமுக அரசுகள்; செப். 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்''- ஸ்டாலின் அழைப்பு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

பாஜக - அதிமுக அரசுகள் விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 22) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது என்ற அரிய நிலைமையைப் பயன்படுத்தி, மக்கள் நலனிலும் அவர்தம் நல்வாழ்விலும் அக்கறை செலுத்தாமல்; ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய தொழிலாளர்களை வேலையின்றி, பட்டினியால் வாடச் செய்து, ஊர் ஊராக அலையவைத்து, நூற்றுக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய பாஜக அரசு, தற்போது விவசாயிகளின் வாழ்க்கையுடன் விபரீத விளையாட்டு நடத்தும் விநோதமான மசோதாக்களை நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைப் புறந்தள்ளி; மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து முறையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியபோதும்; அதனைப் பரிசீலிக்காமல் நிராகரித்து, குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக, அவையின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த மொழிபேசும் மக்களைப் பாதிப்பதாக இருந்தாலும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகக் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்கிற வரலாறு இப்போதும் தொடர்வதைப் பொதுமக்கள் அறிவர்.

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அவர்களை அடிமைப்படுத்தும் மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள், சட்டமாவதையும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளிலும் கடுமையாக எதிர்த்தது திமுக. தோழமைக் கட்சியின் உறுப்பினர்களும் உறுதியுடன் எதிர்த்தனர்.

விவசாயிகளைப் பாதுகாத்திட ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும், கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (செப். 21) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுகவின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தும் நான் தலைமையேற்க, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகிய முன்னோடிகளுடன் தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகள் நலன் காக்க ஆலோசனை நடத்தப்பட்டது.

வேளாண்மை சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்களை, கரோனா பேரிடர் காலத்திலும் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், அவசர அவசரமாக நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ள மத்திய பாஜக அரசும், அதன் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்றும், அவர்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்கப்பட்டுப் பன்மடங்கு உயரும் என்றும் விளக்கம் அளிப்பதுடன், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களையும் அளிக்கிறார்கள்.

ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பொய்யை உண்மையாக்கிவிடலாம் என மத்திய பாஜக அரசு நம்புகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா ஊரடங்கு கால அறிவிப்புகள் இவையனைத்திலும் பிரதமரும் மத்திய பாஜக அமைச்சர்களும் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளோ பொதுமக்களோ இனியும் ஏமாறத் தயாராக இல்லை.

புதிய வேளாண் சட்டங்களின் வாயிலாக, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆகும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இந்தச் சட்டங்களினால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் இழக்கப் போகிறார்கள் இந்திய விவசாயிகள் என்பதே உண்மையான, ஆனால் கசப்பான நிலவரம்.

மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ள விளம்பரத்தில் தேன் தடவித் தரப்பட்டிருக்கும் நஞ்சும், வேளாண் சட்டத்தின் உண்மையான பாதிப்பும் பின்வருமாறு அமைந்துள்ளன.

விளம்பரம்: வேளாண் மசோதா குறைந்தபட்ச ஆதார விலையை எதுவும் செய்யவில்லை.

உண்மை: குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்று குறிப்பிட்டு எந்தப் பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை. குறிப்பாக, எம்.எஸ்.பி. (Minimum Support Price) என்ற சொற்றொடரே அச்சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.

விளம்பரம்: மண்டி முறை உள்ளபடியே தொடரும்.

உண்மை: ஆன்லைன் வர்த்தகத்தால் முதலில் பலியாவது மண்டிகளும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களும், உழவர் சந்தைகளும்தான்.

விளம்பரம்: வேளாண் மசோதா விவசாயிக்குச் சுதந்திரம் வழங்குகிறது.

உண்மை: அதிக விலை கிடைக்கும் சந்தையில், தங்களின் விளைபொருட்களை விற்கும் சுதந்திரத்தை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. பண்ணை ஒப்பந்தம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமைகளாக்குகிறது. அடிமைகளுக்கு ஏது சுதந்திரம்?

விளம்பரம்: ஒப்பந்தமானது விவசாயிகள் முன் நிர்ணய விலையைப் பெறுவதற்கு ஏதுவாகும்.

உண்மை: இது பொய். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மூலம் பதுக்கல் ஊக்குவிக்கப்பட்டு, எவ்வளவு வேண்டுமானாலும் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தாராளமயம் செய்யப்பட்டு விட்டது. ஆகவே, அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் பெற அனுமதிக்கிறது.

விளம்பரம்: விவசாயி எந்த நிலையிலும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் சுதந்திரமானவராக இருப்பார்.

உண்மை: கார்ப்பரேட் கம்பெனிக்கும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது. ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போக முடியாது.

விளம்பரம்: சிறுவிவசாயிகள் பெரும் பலன் பெறுவர். மேலும், அவர்கள் நிச்சய லாபங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் உபகரணத்தின் பயன்களையும் பெறுவர்.

உண்மை: இது பச்சைப் பொய். ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன் பெறும். சிறு விவசாயிகள் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவார்கள். தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனத்திற்குத்தான் பயன்! கழனிகளில் சேற்றில் இறங்கி, ஏர் ஓட்டி, வியர்வை சிந்த உழைத்துக் கொண்டிருக்கும் சிறு விவசாயிக்கு எப்படிப் பயனளிக்கும்?

ஆகவே, முழுக்க முழுக்க இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி, விவசாயம் மட்டுமே தெரிந்த 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாமர விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி அவர்களை ஒழித்துக் கட்டும் சட்டம்.

பாஜக அரசின் பயனேதுமற்ற இத்தகைய சட்டத்துக்கு நேர் எதிராக, விவசாயிகளின் நலன் காக்கத் தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, அதன் வாயிலாக உணவு தானியங்கள் அரசாங்கத்தால் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு வளர்த்த காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு உழவர் சந்தைகளைத் திமுக அரசு உருவாக்கியது.

விவசாயிகளின் நலன் காக்கும் செயல்பாடுகளில் மாநில அரசாங்கமே முன்னிற்க முடியும் என்பதைத் தமிழகம் நிரூபித்து, பொது விநியோகத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்தி, நியாய விலைக்கடை வழியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட முடியும் எனக் காட்டி வருகிறது.

தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது பொது விநியோகத் துறையை எப்படிச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் எனப் பிற மாநில அரசுகளுக்கு, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மத்திய பாஜக அரசின் எந்த ஒரு சட்டமும் மாநில உரிமைகளைப் பறிப்பதுபோல வேளாண்மைச் சட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. அதனால், எதிர்க்கட்சியான திமுக இதனை முழுமையாக எதிர்க்கிறது.

ஆளுங்கட்சியான அதிமுக தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொண்டு மிச்சக்காலத்தை ஓட்டுவதற்காக விவசாயிகளுக்குத் துரோகம் செய்து, மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து அவை சட்டமாகத் துணை நின்றுள்ளது.

வேளாண் மசோதாக்களால் ஆபத்து என்பதை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தன் உணர்வை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தி இருப்பதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

தற்சார்புக் கொள்கை என்று வானவில் போல வண்ணவண்ணமாக வார்த்தைஜாலம் காட்டிக்கொண்டு, தன்மானத்துடன் வாழும் இந்திய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியிருக்கும் பாஜக அரசையும் அதற்குத் துணைபோன விவசாயி வேடம் போடும் அதிமுக அரசையும் கண்டித்து, திமுகவும் தோழமைக் கட்சியினரும் விவசாய அமைப்பினருடன் இணைந்து நின்று, செப்டம்பர் 28-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் கரோனா கால விதிமுறைகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப வேண்டிய முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அவற்றைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு, விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் வழங்கி, விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளும் பாஜக - அதிமுக அரசின் துரோகங்களை அம்பலப்படுத்துங்கள்!

போராட்டத்தில் எழுப்பப்படும் முழக்கங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக எட்டுத் திசையும் அதிரட்டும்.

செப்டம்பர் 28 நடைபெறுகிற ஆர்ப்பாட்டம், விவசாயிகளின் பங்கேற்புடன், பொதுமக்களின் ஆதரவுடன் மத்திய, மாநில அரசுகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தட்டும்!

இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும்! நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்! உலகத்தார்க்கு ஆணியாம் உழவர்களைப் போற்றட்டும்! விவசாயிகளின் வாழ்வு மலர்ந்து மணம் பெறட்டும்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x