

கோட்டையில் பாஜக கொடி அல்ல எப்போதும் அதிமுக கொடிதான் பறக்கும். தேசியக்கொடிதான் எப்போதும் பறக்கும் என பாஜக தலைவர் முருகனுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும் என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரத்தில் இன்று ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“நான் விவசாயிதான். எனக்கு விவசாயம் பற்றித் தெரியும். ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?
வேளாண் திட்டத்தை ஆதரிப்பதற்குக் காரணமே, 3 சட்டங்களிலும் விவசாயிகளுக்குப் பயன் இருப்பதால்தான். விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் ஆதரிப்போம். அதேநேரம் விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
டெல்டா பகுதியில் மீத்தேன், ஈத்தேன் எடுக்க யார் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது? ஸ்டாலின்தானே போட்டார். ஆனால், முடித்து வைத்தது அதிமுக அரசு. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா மக்களைப் பாதுகாக்கிறது அதிமுக அரசு. ஆனால், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
மாநிலங்களவையில் வேளாண் சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடன் விளக்கம் கேட்கப்போகிறோம்.
கோட்டையில் பாஜக கொடி விரைவில் பறக்கும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அப்படிச் சொல்வது அவரது விருப்பம். அதிமுக கொடி பறக்கும் என்பதுதான் எங்கள் நிலை. நிரந்தரமாக அதிமுக கொடி பறக்கும். கோட்டையில் அதிமுக கொடி பறக்காது, தேசியக்கொடிதான் பறக்கும். பாஜக கொடி பறக்கும் என்றால் அதை முருகனிடம்தான் கேட்கவேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.