Last Updated : 22 Sep, 2020 02:28 PM

 

Published : 22 Sep 2020 02:28 PM
Last Updated : 22 Sep 2020 02:28 PM

அதிமுக நிர்வாகியை மிரட்டிய வழக்கில் அமமுக செயலரைக் கைது செய்யத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்துப் பேசியதைக் கண்டித்த அதிமுக நிர்வாகியை மிரட்டியது தொடர்பான வழக்கில் அமமுக மாவட்டச் செயலரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமமுக செயலர் கார்த்திக் பிரபாகரன் (50). இவர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலையில், சமீபத்தில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்தக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், அதுகுறித்துக் கேட்டதற்குத் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கார்த்திக் பிரபாகரன் மீது அதிமுகவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார், கார்த்திக் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்திக் பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிடுகையில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார்தாரரை மனுதாரர் மிரட்டவில்லை. பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''போலீஸ் தரப்பில் தலைமை அரசுக் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகவுள்ளார். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து விசாரணையை செப். 30-க்கு ஒத்திவைத்தும், அதுவரை மனுதாரரைக் கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x