

சேலம்-சென்னை வரை அமைய உள்ள 8 வழிச் சாலை திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை கைவிடக் கோரி மக்களவையில் அக்கட்சியின் எம்.பியான டாக்டர்.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து மக்களவையின் பூஜிய நேரத்தில் தருமபுரி தொகுதி எம்.பியான டாக்டர்.செந்தில்குமார் பேசியதாவது: தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற பகுதிகளில் 56 கிலோமீட்டர் தூரம் வரையில் சேலம் -சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதனால் அப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் 2500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
ஏற்கனவே சேலம் முதல் சென்னை செல்வதற்கு வேலூர் வழியாக ஒரு நான்கு வழிச்சாலையும், திண்டிவணம் வழியாக மற்றொரு நான்கு வழிச்சாலையும் உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள இந்த இரண்டு நான்கு வழி சாலைகளின் விரிவாக்கம் செய்வதை அரசு தவிர்த்து வருகிறது.
இந்த புதிய எட்டு வழிச் சாலை திட்டத்தினால் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தினால் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 17 பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கிறது.
எனவே அந்த 17 பஞ்சாயத்துகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கிராம சபா கூட்டத்தில் ஒன்று கூடி இந்த திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஆகவே அப்பகுதியில் வாழும்
விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்பளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.