

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களின் வாக்குகள் இருந்தும் முக்கிய அரசியல் கட்சிகள் மீனவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலை தொடர்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மீனவர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மீனவப் பிரதிநிதிகளின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரான குறும்பனை பெர்லின் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்துடன் இருந்தபோது கடலோடி சமூகத்தைச் சேர்ந்த அம்புறோஸ் றோட்ரிக் 1947-ல் அப்போதைய அகஸ்தீஸ்வரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 1951-ல் விளவங்கோடு தொகுதியிலும், 1954-ல் கொல்லங்கோடு தொகுதியிலும் கடலோடி சமூகத்தைச் சேர்ந்த குளச்சல் அலெக்சாண்டர் மேனுவேல் சைமன் வெற்றி பெற்றார். அப்போது இத்தொகுதி கடலோடிகளுக்கான தொகுதியாகவே இருந்தது.
குமரி மாவட்டம் 1956-ல் தமிழகத்துடன் இணைந்தது. அடுத்து வந்த தேர்தலில் அலெக்சாண்டர் மேனுவேல் சைமனின் மனைவி லூர்தம்மாள் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அவர் 1957-62 காலத்தில் காமராஜர் அமைச்சரவையில், மீன்வளத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். லூர்தம்மாள் சைமனைத் தொடர்ந்து, 1996-ல் குளச்சல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இ.ரா.பெர்னார்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின் கடலோடிகள் பிரதிநிதித்துவம் முற்றிலுமாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. பிரதான அரசியல் கட்சிகள் மீனவர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்துகிறதே தவிர மீனவ சமூகத்தில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை.
குமரியில் தேர்தல்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் மீனவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மீனவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் எந்தக் கட்சியும் இடம் கொடுப்பதில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் வெறுமனே ஓட்டுப்போடும் கருவிகளாக இருக்க வேண்டும்? அரசியல் கட்சிகளில் மிகத்தீவிரமாக உழைக்கும் மீனவ சமூகத்தினருக்கு, தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிக்கும் வேலையை அரசியல் கட்சிகள் செவ்வனே செய்கின்றன.
இனி இந்த நிலை தொடரக் கூடாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் மீனவர்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும். எங்களின் இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சியினர் வட்டத்தில் எழுப்பியுள்ளோம். மீனவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே எங்களின் குரலை அரசு மட்டத்தில் கொண்டு செல்ல முடியும்'' என்றார்.