

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (செப். 21) காலை 89.77 அடியாக இருந்தது. நீர் இருப்பு 52.38 டிஎம்சி-யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 450 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்தது. நேற்று இரவு 8 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (செப். 22) காலை விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.45 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 54.32 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.