

சேலம் பழைய பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ஈரடுக்குப் பேருந்து நிலையமாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு, ரூ.92.13 கோடி மதிப்பில் ஈரடுக்குப் பேருந்து நிலையமாக கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2,839 நடைகள் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. தரைமட்ட தளத்தில் 54 கடைகள் மற்றும் 1,648 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் கட்டப்படுகிறது.
மேலும், தரைத்தளத்தில் 26 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதியும், 29 கடைகள், 11 அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் அமைக்கப்படுகிறது. இரண்டாம் தளத்தில், 47 கடைகள், மேற்கூரை தளத்தில் 11 கடைகள் என பணிகள் திட்டமிடப்பட்டு கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
தற்போது, தரைமட்ட தளம், தரைத்தளம் பணிகள் முடிந்த நிலையில், முதல் தளத்தின் கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக கட்டுமானப் பொறி யாளர்கள் கூறும்போது, ”ஈரடுக்குப் பேருந்து நிலைய பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரடுக்குப் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்படுவதால், இது சேலத்தின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கும்” என்றனர்.