

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் காவிரி கரையோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஆக.9-ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி அளவுக்கு நீர்வரத்து உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின்னர், மழை குறையத் தொடங்கியதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்தை நோக்கி வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. எனவே, ஒகேனக்கல்லிலும் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக மீண்டும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இது நேற்று காலை 19 ஆயிரம் கனஅடியாகவும், பகலில் 25 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 42 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியைக் கடந்தால் ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையை வெள்ளம் மூழ்கடிக்கும். நேற்று பகலில் நடைபாதை வெள்ளத்தில் மூழ்கியது.
பிரதான அருவி, சினிபால்ஸ் அருவி, ஐவர் பாணி அருவி ஆகிய இடங்களில் தற்போது சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளில் வருவாய், வனம், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அரசுத் துறையினர் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றோரங்களில் குடியிருப்பு உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு குறித்து தண்டோரா மூலம் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரியில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் காவிரி கரையோரக் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள பண்ணவாடி கோட்டையூர் உள்ளிட்ட காவிரி கரையோரக் கிராமங்களில் பரிசல் இயக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை மூலம் இக்கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 92.26 அடியாக இருந்த நிலையில், நேற்று 89.92 அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 11,241 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 52.55 டிஎம்சியாக உள்ளது.