

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என மாநில பாஜக தலைவர் முருகன் கூறினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் வரிகள் குறையும், நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும், வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும், விளை பொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது, விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.
புதிய சட்டம் விவசாயிகளின் சுமைகளைக் குறைக்கும் வகையிலும், விளை பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும்அமைந்துள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
புதிய மசோதாவால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கிசான் நிதியுதவித் திட்டத்தில் நடந்த மோசடி மீதான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
மனக்கசப்பு இல்லை
அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பு இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.