

காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட சுற்றியுள்ள மாவட்டங்களில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஸ்ரீதரின் கூட்டாளிகள் இருவர் உட்பட 20 பேர் நேற்று கோவாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டு முக்கிய ரவுடியாக வலம் வந்தவர் ஸ்ரீதர். அவர் காவல் துறையினரின் கடுமையான நெருக்கடியால் கம்போடியாவில் பதுங்கி இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகள் தினேஷ்(எ) தினேஷ்குமார்(39), பொய்யாகுளம் தியாகு(29) ஆகியோர் ஸ்ரீதர் இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இவர்கள் வணிகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். இவர்களை சிவகாஞ்சி போலீஸார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பல்வேறு பகுதி ரவுடிகளிடம்..
பின்னர், கடந்த ஜூன் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த இவர்கள் மீண்டும் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் இறங்கினர். இவர்கள் சென்னை, கடலூர், ரெட்ஹில்ஸ், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய ரவுடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இணைந்து செயல்படத் தொடங்கினர். இதனால் பல்வேறு மாவட்ட மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. கோவாவில் பதுங்கி இருந்த தினேஷ், தியாகு உள்ளிட்ட 20 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சி காவல் துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீதரின் கூட்டாளிகளான ரவுடிகள் தினேஷ், தியாகு இருவரும்கோவாவில் இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்தனர். அங்கு காலன்குடே என்ற பகுதியில் 2 இடங்களில் கூட்டமாக தங்கி இருந்த 20 ரவுடிகள் மொத்தமாக சிக்கினர்.
இதில் தினேஷ் மீது 5 கொலை உள்ளிட்ட 30 வழக்குகளும் உள்ளன. பொய்யாகுளம் தியாகு மீது 8 கொலை உள்ளிட்ட 61 வழக்குகளும் உள்ளன.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த ரவுடி சுரேந்தர்(37), ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த ரவுடி சேது(எ)சேதுபதி(26), சுகேஸ்வரன்(30) ஆகியோரும் பிடிபட்டவர்களில் முக்கியமானவர்கள்.
இந்த வழக்குகளில் ரவுடிகளை கைது செய்த தனிப்படையினரை பாராட்டி அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.