Published : 22 Sep 2020 07:32 AM
Last Updated : 22 Sep 2020 07:32 AM

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நகர்ப்புறத்திலும் வேலை உறுதி திட்டம் தேவை: தமிழக அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

பொருளாதார மேம்பாடு குறித்த பரிந்துரை அறிக்கையை முதல்வரிடம் குழு தலைவர் சி.ரங்கராஜன் வழங்கினார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சண்முகம், நிதித் துறை செயலர் கிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் என்.நாராயணன், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என்.சீனிவாசன், இந்தியன் வங்கி தலைமை செயல் அலுவலர் பத்மஜா சுந்துரு, ஈக்விடாஸ் வங்கி மேலாண்மை இயக்குநர் வாசுதேவன், சென்னை பல்கலை துணைவேந்தர் துரைசாமி, எம்ஐடிஎஸ் பேராசிரியர் பி.ஜி.பாபு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குநர் சண்முகம், ஐஐடி பேராசிரியர் சுரேஷ் பாபு.

சென்னை

பொருளாதாரத்தை மீட்க, அரசின் செலவுகளை அதிகரிப்பதுடன், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று சி.ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டியநடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ரங்கராஜன் உள்ளிட்டோர் நேற்று சமர்ப்பித்தனர். அத்துடன் அறிக்கை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, முதல்வர் பழனிசாமி கூறியபோது, ‘‘தமிழகம் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும், வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் உங்கள் கருத்துகளை அரசு கவனமாக எடுத்துக் கொள்ளும்’’ என்றார்

பின்னர் செய்தியாளர்களிடம் சி.ரங்கராஜன் கூறியதாவது:

கரோனா பாதிப்பால் பொருளாதாரநிலை மந்தமடைந்துள்ளது. ஊரடங்கில் இருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நோக்கில் ஊரடங்கில் இருந்து விரைவாக வெளிவருவது நல்லது. 2021-ம் ஆண்டின் வளர்ச்சி குறித்த கணிப்பில், ஒரு விதத்தில், வளர்ச்சி 1.71 சதவீதமாகவும், மற்றொரு விதத்தில் சரிவு சிறிது இருக்கலாம்.

ஜிஎஸ்டி வருவாய், பெட்ரோலுக்கான வரி, மின்உபயோகத்தை பார்த்தால் கரோனாவுக்கு முந்தையநிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதனால், 2 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்புவோம் என தோன்றுகிறது.

வரியை குறைக்கத்தான் கேட்கின்றனர். எனவே, இந்த ஆண்டு வரியை உயர்த்த வழியில்லை. ஆனால், குறுகியகால செலவுகள் அதிகரிக்கும்போது வரிவிகிதத்தை மாற்ற வேண்டியது வரும்.

கிராமப்புற வேலை உறுதி திட்டம்போல், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்தலாம் என கூறியுள்ளோம். இதுதவிர, கட்டுமானத் தொழிலாளர்கள் நிதியில் உள்ள ரூ.3,200 கோடியை உடனடியாக செலவழிக்க கூறியுள்ளோம்.

இந்த ஆண்டு அரசின் கடன் சுமை உயரத்தான் செய்யும். வருவாய் குறைந்து, மருந்து, சுகாதாரச் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் சுகாதாரச் செலவை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். இதற்காக இன்னும் ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளோம்.

செலவுகளை அதிகரித்தாலே, பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். நிதிநிலை அறிக்கையைவிட மூலதன செலவு ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் செலவழிக்குமாறு கூறியுள்ளோம். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

தொழில் வளர்ச்சிக்கு, தமிழ்நாடுதொழில் முதலீட்டு கழகத்தின் மூலதனத்தை ரூ.1,000 கோடியாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் அந்த கழகம் நீண்டகால நிதியுதவியை அளிக்க முடியும். மேலும்,தொழிற்பூங்காக்கள், தொழில்நகரம் இவற்றை உருவாக்கி, அதில் ஒரு பங்கை சிறு தொழிலுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x