இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான வழக்கு: கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான வழக்கு: கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
Updated on
1 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (தமிழ்நாடு மாநிலம்) தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சியின் மூத்த தலைவரான காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள ஒரு வழக்கில், ‘‘காதர் மொய்தீன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் தலைவராகவும், திமுகவில் எம்.பி.யாகவும் அங்கம் வகித்து வருகிறார். இவ்வாறு இரு கட்சிகளில் அங்கம் வகிப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அடிப்படை சட்டவிதிகளுக்கு புறம்பானது.

எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து காதர்மொய்தீனை நீக்க வேண்டும். கட்சிப்பெயரையோ, கொடியையோ அவர்பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்தவழக்கில் காதர் மொய்தீனுடன், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான ஏ.முகமது இஸ்மாயிலையும் பிரதிவாதியாக சேர்த்துள்ளார்.

இந்த வழக்கில் கட்சி சார்பில் முகமது இஸ்மாயிலை பிரதிவாதியாக சேர்த்துள்ளதை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (தமிழ்நாடு மாநிலம்)பொதுச் செயலாளராக பதவிவகிக்கும் எனக்கு மட்டுமே கட்சிசார்பில் ஆஜராகி கருத்துகளை தெரிவிக்க முகாந்திரம் உள்ளது.மாநிலச் செயலாளரான முகமதுஇஸ்மாயில் ஆஜராக எந்த முகாந்திரமும் இல்லை. தாவூத் மியாகான் தனது ஆதரவாளரான ஏ.முகமது இஸ்மாயிலை திட்டமிட்டு இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துள்ளார்.

எனவே கட்சி சார்பில் ஆஜராக முகமது இஸ்மாயிலுக்குப் பதிலாக பொதுச்செயலாளர் என்ற முறையில் என்னை இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்” என்று இதில் கோரியிருந்தார். முகமது அபுபக்கரின் இந்த மனுவை சிட்டி சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து முகமது அபுபக்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கில் கட்சி சார்பில் ஆஜராக தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை மனுதாரர் தகுந்த ஆதாரங்களுடன் கீழமை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறியதால்தான் அவர் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை என்பதால் அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்துள்ள இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேநேரம் இதுதொடர்பாக ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மனுதாரர் தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக இணைத்துக்கொண்டு தனது கோரிக்கையை சட்ட ரீதியாக முன்வைக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in