

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 30 எண்ணிக்கையில் மொத்தம் தமிழ்நாட்டில் 960 நபர்களுக்கு 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "2013–14 ஆம் நிதியாண்டில் 4,900 ரூபாய் மதிப்புடைய மடக்கு சக்கர நாற்காலி மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,410 ரூபாய் மதிப்புடைய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி 47 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் 911 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாதாரண மடக்கு சக்கர நாற்காலிகள் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிறப்புத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.
தற்பொழுது மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வழங்கக் கூடிய உதவி உபகரணங்கள் ஏதுமில்லை.
எனவே, முதுகுத் தண்டு வடம், நரம்பு உறை தோய்வு நோய் மற்றும் தண்டுவட குறைபாடு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 20,000 ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும்.
முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 30 எண்ணிக்கையில் மொத்தம் தமிழ்நாட்டில் 960 நபர்களுக்கு 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் இவை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
காது கேளாதோர் பள்ளிக்கு சொந்தக் கட்டிடம்:
புதுக்கோட்டையிலுள்ள காது கேளாதோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிக்கு விடுதி மற்றும் வகுப்பறைகளுடன் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5.414 சதுர அடி பரப்பளவில் சொந்தக் கட்டடம்கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "மாநிலத்திலுள்ள அரசு சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி அளிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 23 அரசு சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. புதுக்கோட்டையிலுள்ள காது கேளாதோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி 22 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு விடுதி மற்றும் வகுப்பறைகளுடன் கூடிய சொந்தக் கட்டடம் 5.414 சதுர அடி பரப்பளவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.