

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் தான் சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்தை கலாம் பெயரில் அறக்கட்டளை உருவாக்குவதற்கு வழங்கியுள்ளார்.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறையில், பிரிவு அலுவலராக பணியாற்றி கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்றவர் ந.மனோகரன்.
இவர் அப்துல் கலாம் பெயரில் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையை உருவாக்கி மாணவர்களுக்கு உதவிபுரியும் நோக்கோடு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய தொகையினை வைப்பு நிதியாக வைத்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி, பல்கலைக்கழகத்தில் நானோ அறிவியல் துறையில் பயிலும் ஆராய்ச்சி மாணவ, மாணவியரில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ந.மனோகரன் கூறியதாவது:
வங்கியில் சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்தை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவிடுங்கள் எனக் கூறி கொடுத்தேன். இருப்பினும், பல்கலைக்கழக நிர்வாகம், நீங்களே எதற்காக கொடுக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கொடுங்கள் எனக் கேட்டது.
இதையடுத்து, அப்துல்கலாம் பங்களிப்பு செய்த நானோ அறிவியல் துறையின் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவ, மாணவியரில் ஒருவருக்கு இந்த தொகையில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு படிப்புக்கான உதவித்தொகை கொடுக்குமாறு குறிப்பிட்டேன் என்றார்.
உடல் தானம்
கடந்த 1986-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் (தட்டச்சராக) பணியில் சேர்ந்த ந.மனோகரன், 30 ஆண்டுகள் பணிக் கால அனுபவத்துக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார்.
கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஒருநாள் கூட விடுமுறையே எடுக்காமல் ஓய்வு பெறும் வரை பணியாற்றி வந்துள்ளார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரியும் நாளுக்காக மட்டும் மாற்றுவிடுப்பாக எடுத்துள்ளார்.
இவர் பணியில் சேரும்போது பி.காம். மட்டுமே படித்திருந்தார். பணிக் காலத்தில், எம்.ஏ. அரசியல் அறிவியல், ஏம்.ஏ. சுற்றுலா மேலாண்மை, எம்.காம்., எம்.பி.ஏ. மனிதவளம், பி.ஜி. டிப்ளமோ இதழியல் மற்றும் காட்சித் தொடர்பியல், டிப்ளமோ -தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம், பி.பி.எல். ஆகிய படிப்புகளை தொலைதூர படிப்பின் மூலம் முடித்துள்ளார். உடல் தானமும் செய்துள்ளார்.