Published : 13 Mar 2014 01:21 PM
Last Updated : 13 Mar 2014 01:21 PM

திமுக உட்கட்சி பூசலை போக்க அதிருப்தியாளர்களுக்கு புதிய பொறுப்பு: மாவட்டம், தொகுதி மாற்றி நியமனம்

திமுகவில் உட்கட்சிப் பூசலை தவிர்க்கும் வகையில், அதிருப்தியாளர்கள் மற்றும் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தலைமையிட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திமுக வேட்பாளர் தேர்வில், நீண்டகால திமுக விசுவாசிகளுக்கும், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்தது. மொத்தமுள்ள 35 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும், வேட்பாளர்கள் தேர்வில் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சில தொகுதிகள் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை இல்லாதோருக்கும், பல தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்போடும், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு தேர்தலில் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் கட்சிக்காக பணியாற்றிய திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து திமுக தலைமைக்கும் பலர் புகார் செய்தனர். இதேபோல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து, தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதுகுறித்து, திமுக தலைமை பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதிருப்தியாளர்களையும், தொகுதி கிடைக்காதவர்களையும் சரிக்கட்டும் வகையில் புதிய பொறுப்புகளை அளித்துள்ளது. கட்சிப் பூசலை போக்கும் வகையில், திமுக தலைமை எடுத்த முடிவுகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

வேட்பாளர் தேர்வு தன்னை மீறி நடந்தது என்றாலும், கட்சியில் விசுவாசமானோரை புறக்கணிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தலைமை முடிவெடுத்தது. அதேபோல் அதிருப்தியாளர்களால் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் செயல்பட்டு விடக் கூடாது என்பதிலும், திமுக தலைமை கவனமாக இருந்தது.

இதனைக் கருத்தில்கொண்டு, தொகுதியின் பொறுப்பாளர்களை வேறு மாவட்டம் அல்லது வேறு தொகுதியைச் சேர்ந்தவர்களாக நியமித்துள்ளது. மாவட்டச் செயலாளர்களையோ அல்லது சொந்த தொகுதி அல்லது மாவட்டத்தினரை பொறுப்பாளராக நியமித்தால், தேர்தல் பணிகளில் விருப்பு, வெறுப்பு ஏற்படும் என்பதால், வேறு தொகுதிகளுக்கு மாற்றி நியமனம் நடந்துள்ளது.

சேகர்பாபு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வைத்தியலிங்கம், பிச்சாண்டி, முத்துசாமி, கண்ணப்பன், குழந்தைவேலு, பழனிச்சாமி, குத்தாலம் கல்யாணம், திருச்சி செல்வராஜ், டி.பி.எம்.மைதீன்கான், சேடப்பட்டி முத்தையா, ரகுபதி, ஆவுடையப்பன் என பெரும்பாலான பொறுப்பாளர்கள் மாவட்டம் மாறியே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி கிடைக்காதவர்கள், தேர்தல் பொறுப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தொகுதி பொறுப்பாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து, அவர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டுமென்று, அனைத்து வேட்பாளர்களுக்கும் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதேபோல் யாரும் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேலை செய்யக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x