ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
Updated on
1 min read

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 23-ம் தேதி முதலே ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக் தொடங்கியது.

கடந்த 22-ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த தண்ணீர் மறுநாள் விநாடிக்கு 7,000 கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களும் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் கூடியது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மட்டுமின்றி காவிரியின் வழித்தடத்தில் பெய்த மழை நீரும் ஆற்றில் சேர்ந்ததால் அன்று இரவு நீர்வரத்து வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி என்ற அளவைக் கடந்தது. வழக்கமாக, நீர்வரத்து அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி என்ற நிலையை எட்டினால் அருவியில் குளிக்க ஆபத்தான சூழல் நிலவும். சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லவும், ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்படும்.

தற்போது நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியை கடந்ததால் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்லவும், ஆற்றில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வரத்தின் அளவுக்கேற்ப இந்த தடை அமலில் இருக்கும் நாட்கள் நீடிக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in