

திருநெல்வேலி, தென்காசியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பழைய வாக்காளர் அட்டைகளுக்குப் பதிலாக புதிய வண்ண வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணி தொடர்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
''திருநெல்வேலி, தென்காசியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பழைய வாக்காளர் அட்டைகளுக்குப் பதிலாக புதிய வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி கடந்த 3.09.2020 அன்று தொடங்கி, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு, வீடுகளுக்குச் சென்று, நேரிடியாக வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 6,66,024 புதிய அடையாள அட்டைகள் வரப்பெற்றது.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக பெறப்பட்டுள்ள அட்டைகள் எண்ணிக்கை விவரம்:
சங்கரன்கோவில் (தனி)- 72,539, வாசுதேவநல்லூர் (தனி)- 71,581, கடையநல்லூர்- 70,481, தென்காசி- 75,425, ஆலங்குளம்- 73,711, திருநெல்வேலி- 58,850, அம்பாசமுத்திரம்- 64,629, பாளையங்கோட்டை- 45,191, நாங்குனேரி- 66,894, ராதாபுரம்- 66,723.
இந்த அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட வாக்காளர் ஒப்புதல் பதிவேட்டிலும், அதனுடன் வழங்கப்படும் நோட்டீஸிலும் கையெழுத்திட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும், புதிய அட்டை வரப்பெற்றுள்ளதைத் தெரிவித்து, ஏற்கெனவே குறுஞ்செய்தி கணிணி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் புதிய வண்ண வாக்காளர் அட்டைகளில் ஏதேனும் திருத்தம், அதாவது முகவரி, வயது, பிறந்த தேதி போன்றவற்றில் இருந்தால், படிவம் 8-ஐ நிரப்பிக் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம்.
புதிய வண்ண வாக்காளர் அட்டைகளைப் பெற்றவர்களின் பழைய வாக்காளர் அட்டை இனி செல்லாது. எனவே, புதிய வண்ண வாக்காளர் அட்டை வரப்பெற்றவர்கள் மறக்காமல், வாக்குச்சவாடி நிலை அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்''.
இவ்வாறு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.