

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் கார் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்திய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள தண்டுபத்து கிராமம் ஆகும். இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பொலிரோ கார் கண்ணாடியை இன்று அதிகாலை 1 மணியளவில் மர்ம நபர்கள் கல்லால் தாக்கி உடைத்துச் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் வந்து சேதமடைந்த காரைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீஸார், அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இரண்டு நபர்கள் கார் கண்ணாடியைச் சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கார் கண்ணாடியைச் சேதப்படுத்திய காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜின்னா (27) மற்றும் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் செல்வநாதன் (41) ஆகிய இருவரையும் சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.
முன்விரோதம் காரணமாக அனிதா ராதாகிருஷ்ணனின் கார் கண்ணாடியை இவர்கள் சேதப்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை, மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.